தாத்தா: இன்றைக்கு அருச்சுனன் தீர்த்த யாத்திரை பற்றி கதை. நாரதர் ஐவரும் ஒரு மனைவியோடு வாழ ஒரு நியதியை வகுத்துத் தந்தார். ஐவரும் அப்படியே வாழ்வது என முடிவெடுத்தனர். நன்றாக் முறைப்படி இந்திரப்பிரத்தம் நகரில் அரசாண்டு கொண்டிருக்கும் போது ஒரு அந்தணன் அரண்மனைக்கு முன் வந்து புலம்பி முறையிடுகிறான். "விடைகாவலர்நிரைகொண்டனர் வில்வேடுவரென்றான்''. அதாவது அந்த ஊர் யாதவரின் பசுக்களை வேடுவர் வளைத்துச் செல்கின்றனர் என்று முறையிட்டான். இதைக் கேட்ட அர்ச்சுனன் உடனே அதைத் தடுத்த நிறுத்த எண்ணி அரண்மனைக்குள் ஓடினான். அப்போது பாஞ்சா- தருமருடன் இருக்கும் முறை. இருவரும் அரண்மனையில் இருந்த போது அர்ச்சுனன் அவர்களைப் பார்க்க நேர்ந்தது. எனவே ஏற்கனவே செய்துகொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி கானகம் சென்று இறைவழிபாடு நடத்துவதென அர்ச்சுனன் முடிவெடுத்தான். தருமன் தடுத்தும் கேட்கவில்லை. அப்படி போய் ஒரு நாள் கங்கையில் புனலாடிக் கொண்டிருந்த போது உலூபி என்றொரு நாக கன்னிகையைக் கண்டான் விசயன். அவளின் அழகில் மயங்கிய விசயன் பிலத்துவாரம் புகுந்து நாகலோகத்தை அடைந்தான். நாக லோகத்தில் இவர்களுக்குத் திருமணம் நடைபெறுகிறது. சில நாட்கள் இன்பமாக இருக்கிறார்கள். உலூபி இராவானைப் பெற்றெடுக்கிறாள். (வடமொழியில் இராவாந் - எனவே வில்-யார் இராவான் என்று பயன்படுத்துகிறார். பரவலாக அரவான் என்றால் எல்லோருக்கும் இப்போது புரியும்). இமய மலையில் உள்ள நதிகளில் புனலாடிய பின் விடைபெற்று கிழக்குத் திசை நோக்கி தன் பயணத்தைத் தொடருகிறான். யமுனையில் நீராடுகிறான். பின் தென்திசை நோக்கிப் பயணமாகிறான். திருவேங்கடம், அரவக்கிரி, காஞ்சி, திருக்கோவிலூர், தில்லை, திருவதிகை, திருவகீந்திரபுரம், திருவரங்கம், இப்படி பல ஊர்களில் பயணித்து இறுதியில் பாண்டியனது தலைநகரத்தை அடைகிறான். ஆமாம் மதுரை மாநகரை ந்தடைகிறான்.
சூர்யா: தாத்தா அரவகிரி என்றால் என்ன? அத்திகிரி என்றால் என்ன? எழுவகை பிறப்புகள் என்றால் என்ன? ஏன் தாத்தா - அந்த காலத்திலேயே அர்ச்சுனன் மதுரைக்கு வந்திருக்கிறாரா? அப்போ மகாபாரதக் கதை நடக்குறப்போவே தமிழகம் இருந்திருக்கிறதா?
தாத்தா: அரவகிரி என்றால் திருவேங்கடம். வடமொழியில் சேஷாசலம் என்பார்கள். அதைத்தான் அரவகிரி என்கிறாரகள். அத்திகிரி என்றால் யானைமலை. இந்திரனின் யானை பூசித்த தலம் சாஞ்சி. அதனால் காஞ்சிக்கு அத்திகிரி என்று பெயர். மகாபாரதக் காலத்திலேயே மதுரை இருந்ததா என்று கேட்கிறார். அதற்கு முன்னாலே இருந்திருக்கிறது.அதைத் தான் முத-லேயே சொன்னேனே. தமிழகமும் தமிழ் மொழியும் அந்தக் காலத்திலேயே சிறந்திருந்தது. திருமாலே தனது முதல் அவதாரமான மச்ச அவதாரத்தை மதுரையில் தான் துவங்கி இருக்கிறார். மச்ச அவதாரத்திற்குப் பிறகு கூர்ம அவதாரம், வராக அவதாரம், நரசிம்ம அவதாரம், வாமன அவதாரம், இராம அவதாரம் எல்லாம் முடிந்து கிருஷ்ண அவதாரம் வருகிறது. அப்போது தான் மகாபாரதக் கதை நடக்கிறது. அதனால் பல யுகங்களாக உள்ள நகரம் நமது மதுரை நகரம் என்பதை நாம் உணர வேண்டும். அதே போல தமிழ் மொழியும் பல யுகங்களாகத் தழைத்த மொழி. இன்னும் வழக்கில் உள்ள மொழி. வடமொழியான சமஸ்கிருதத்தைப் போல் வழக்கொழிந்த மொழி அல்ல நமது தமிழ் மொழி. தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் வேதங்களுக்கு உரை எழுதியே அதற்கு உயிரூட்டிக் கொண்டிருந்தார்கள். பல சொற்களை நாம் தமிழில் சேர்த்துப் பேசுகிறோம். அதனால் அப்படி ஒரு மொழி இருந்தது தெரிகிறது. மற்றபடி அதைப் பேசுகிறவர்கள் என்றால் ஒருசில நூறுபேர் மட்டுமே தான். இதை நான் சொல்லவில்லை. மக்கள் கணக்கெடுப்புத் தகவல் சொல்கிறது. தெரியுதா? சிவபெருமான் இங்கே மன்னராக இருந்திருக்கிறார். பல திருவிளையாடல்களை நிகழ்த்தி இருக்கிறார். இவையெல்லாம் வடமொழியில் காவியமாகப் படைக்கப்பட்டு உள்ளன. ஊழி வந்து உலகமே அழிந்து மீண்டும் தோன்றும் முன்னரே தமிழகம் இருந்திருக்கிறது. தமிழ் மொழி இருந்திருக்கிறது. ஊழிக் காலத்தில் பல இலக்கியச் செல்வங்கள் அழிந்திருக்கின்றன. பல புலங்கள் கடல்நீரில் காணாமல் போய் விட்டன. . காஞ்சி மாநகரில் ஏழு தீர்த்தங்கள் இருந்ததாகக் கூறுகிறார். அவை கம்பை, பம்பை, மஞ்சனி, பிச்சி, கலிச்சி, மண்ணி, வெஃகா. இதே போன்று திருவண்ணாமலை சென்றதையும் அந்த இடம் ஏழு பிறப்புகளையும் இல்லாமல் ஆக்கும் என்றும் கூறப்படுகிறது.
சூர்யா: ஏழு பிறப்புகள் என்னென்னங்க தாத்தா?
தாத்தா: ஏழு பிறப்புகள் என்பவை தேவர், மனிதர், மிருகம், பறவை,ஊர்வன,
நீர்வாழ்வன, தாவரம். சரி நாம் கதைக்கு வருவோம். அப்போது பாண்டியனது தலைநகராக மணலூர் இருந்திக்க வேண்டும். அதனால் தான் வில்-யார் மிக அழகாகச் சொல்கிறார். "தென்திசையிலே சோளதேசத்தைக்கடந்து பாண்டியனது மணலூருபுரத்தில்வனச்சோலையிலே சித்திராங்கதையைக்கண்டு'' .என்று தான் உள்ளது பாட-ல். பாண்டியனது மதுரையில் என்று காணவில்லை. இதை நாம் கவனிக்க வேண்டும்.
சூர்யா: என்னங்க தாத்தா மணலூர் இப்போ ஒரு கிராமம். அங்கே எப்படி அரசர் இருந்திருக்க முடியும்.
தாத்தா: பழைய பாடல்களில் திருப்புவனம் பெரிய ஊராகச் சித்தரிக்கப்படுகிறது. மாடமாளிகைகள் இருந்ததாக பெரியபுராணப் பாடல்களில் வருகிறது. எனவே ஒருகாலத்தில் இருந்திருக்கலாம். பின்னர் மதுரை நோக்கி பாண்டியன் நகர்ந்திருக்கலாம். விசயன் தீர்த்த யாத்திரையில் பாண்டிய மன்னனிடம் வருகிறார். அவர் யார் என்று கேட்கிறார். தான் யார் என்பதைச் சொல்கிறான். விசயனுக்கு விருந்து அளிக்கிறார் மன்னர்.
சூர்யா: அந்த மன்னர் பெயர் என்னங்க தாத்தா?
தாத்தா: அந்த மீனவன் பெயர் சிததிரவாகனன். விசயனுக்கு சித்திரவாகனன் சோலைமலையில் வைத்து விருந்து தருகிறான். அப்பொழுது அவன் மன்னன் மகளை -சித்திராங்கதையைக் காண்கிறான். கண்டதும் காதல் கொள்கிறான் விசயன். காதல் கொண்டதோடு மட்டுமல்ல கந்தர்வ முறையில் யாரும் அறியாமல் திருமணமும் செய்து கொள்கிறான். தோழிகள் மூலம் செய்தி மன்னவன் செவிக்குச் செல்கிறது. அவருக்கு விசயன் பஞ்சவரின் நடுப்பிறந்தோன் பஞ்சவன் என்னும் ஒரு வடபுலத்து மன்னவன் என்பது தெரியும். எனவே மகிழ்ச்சி அடைகிறார். ஆனால் திருமணத்தை நடத்த ஒரு நிபந்தனை விதிக்கிறார். இருவருக்கும் பிறக்கும் ஆண் குழந்தையைத் தனக்குத் தத்து கொடுக்க வேண்டும் என்று கூறுகிறார். காரணம் பாண்டியர் குலத்தில் முன்னம் ஒரு அரசனுக்குக் குழந்தைகள் இல்லாமல் இருந்து கடுமையான தவம் செய்த பொழுது இறைவன் அந்த பாண்டியன் முன் தோன்றி உனக்கு ஒரு ஆண் குழந்தை பிறக்கும். ஆனால் உங்கள் குலத்தில் இனி எப்போதும் ஒரு மகவு தான் கிடைக்கும். ஒன்றுக்கு மேல் எப்போதும் கிடையாது என்று அந்த காலத்திலேயே கட்டுப்பாட்டினை தனது வரம் மூலம் விதித்திருந்தார். இதனால் தான் தான் ஆண் குழந்தையை அரசாளும் பொருட்டு தத்து கேட்பதாகத் தெரிவித்தார்.
சூர்யா: அப்படி தவம் பண்ணிய பாண்டியன் யார் தாத்தா?
தாத்தா: அவன் பெயர் பிரபஞ்சனன். இது வியாசபாரதத்தில் வருகிற கதை. வியாசர் கதை எழுதிய காலத்திலேயே பாண்டியன் வரலாறும் இருந்திருக்கிறது. பாண்டியன் இருந்தால் தமிழும் இருந்திருக்கும். வரலாற்று பூர்வமாகக் கூறவேண்டுமானால் இந்த மாதிரி அங்கீகரிக்கப்பட்ட காவியங்கள் நமது தொன்மையை நமக்குப் புலப்படுத்தும். சரி கதைக்கு வருவோம். என் நவ்வி பெறும் மகவு எனக்கே நல்க வேண்டும்' நவ்வி என்றால் மகள் என்று பொருள்.விசயன் ஒத்துக் கொள்கிறான். சீரும் சிறப்புமாகத் திருமணம் நடைபெறுகிறது. இதன் விளைவாக பப்புருவாகனன் என்று ஓர் ஆண் குழந்தை பிறக்கிறது. சொன்ன சொல் தவறாமல் விசயன் அந்தக் குழந்தையை பாண்டிய மன்னனிடம் வளர்ப்பு மகனாக ஒப்படைத்து விட்டு தன் தீர்த்தயாத்திரையைத் தொடர்கிறான். அங்கிருந்து கன்னியாகுமரி செல்கிறான். பின்னர் மேலைக் கடற்கரை சென்று அனந்தபுரம் மற்றும் பல தலங்களில் இறைவனை வணங்குகிறான். அரம்பையர் ஐவர் மேலைக் கடற்கரையோரம் இருந்த ஆறுகளில் முனிவன் சாபத்தால் முதலைகளாக இருந்தார்கள். அவர்கள் ஐவரையும் சாபவிமோசனம் தந்து அரம்பையர்களாக மீண்டும் ஆக்குகிறான். இறுதியில் கோகர்ணம் என்றும் மேலைக் கடற்கரையில் உள்ள ஒரு இடத்திற்குச் சென்று சிவபிரானை வணங்குகிறான். அங்கேயே தீர்த்தயாத்திரைக்காக உடன் அழைத்து வந்த அந்தணர்களை இருக்கச் சொல்- தான் மட்டும் துவாரகை செல்கிறான்.
சூர்யா: துவாரகைக்கு ஏன் தாத்தா போகிறார் விசயன்? விசயன் என்று ஒருமுறை சொல்கிறீர்கள். அர்ச்சுனன் என்று ஒரு முறை சொல்கிறீர்கள். பார்த்தன் என்று ஒரு முறை சொல்கிறீர்கள். பல்குனன் என்று சொல்கிறீர்கள். இவருக்கு எத்தனை பெயர்கள் தான் உள்ளன தாத்தா?
தாத்தா: அர்ச்சுனனுக்கு ஏகப்பட்ட காரணப் பெயர்கள். வில்-யார் அடிக்கடி கூறும் பெயர்களைச் சொல்கிறேன் கேள். பார்த்தன், அருச்சுனன், கரியோன், விசயன், பாகசாதனி,சவ்வியசாசி, பற்குனன், பார் ஏத்து தனஞ்சயன், கிரீடி, சுவேத வாகன். இப்போது விசயன் துவாரகைக்குச் செல்வது சுபத்திரையைத் திருமணம் செய்து கொள்ள. துவாரகையில் நுழையும் போதே தவக் கோலத்தில் நுழைகிறான் விசயன். ரைவதகம் என்னும் மலைச் சாரலை அடைகிறான். அங்கு சேர்ந்ததும் கண்ணனை நினைக்கிறான். கண்ணன் தான் கேட்டால் கொடுப்பான். நினைத்தான் வருவான். அவன் தானே ஆட்டுவிக்கிறான் அனைவரையும். விசயன் தீர்த்தயாத்திரை வந்ததும் கண்ணன் கருதியதால் தானே. கண்ணனிடம் விசயன் சுபத்திரையைத் தான் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகத் தெரிவிக்கிறான். பதில் ஒன்றும் பேசவில்லை கண்ணன். நாளை வருகிறேன் என்று கூறிவிட்டுச் செல்கிறேன். இந்த மலைச்சார-ல் இந்திரவிழா நடக்கிறது. எனவே யாதவர்கள் அனைவரும் கண்டு களிக்க அங்கு வருகிறார்கள். கண்ணன்,, பலராமன், சுபத்திரை ஆகியோர் விசயனை முனிவர் கோலத்தில் கண்டு முனிவர் என்று கருதி வணங்குகிறார்கள். கண்ணன் அருச்சுனனைத் தனியே கண்டு சுபத்திரையைத் திருமணம் செய்து கொள்ள திட்டம் தீட்டுகிறான். பலராமனுக்கு பக்தி அதிகம். எனவே இந்த முனிவரை அரண்மனைக்கு அழைத்துச் சென்று சுபத்திரையைப் பணிவிடை செய்யச் சொல்கிறான். அரண்மனைக்கு வந்தபிறகு - சுபத்திரையைக் கண்ட பிறகு - முனிவரின் நடையுடை பாவனையில் மாற்றம் தெரிகிறது. மெ-ந்து கொண்டே வருகிறார். சுபத்திரைக்கு இந்த முனிவர் மேல் ஒரு சந்தேகம் வருகிறது. முனிவரிடம் அவரது ஊர் எது என்று கேட்கிறாள். முனிவரோ இந்திரப்பிரஸ்தம் என்று சொல்கிறார். இந்திரப்பிரஸ்தத்தில் தருமர் நலமா? வீமர் நலமா? நகுல சத்துருக்கனர் நலமா? குந்தி தேவியார் நலமா? திரௌபதி நலமா? என்று இப்படி எல்லார் நலத்தையும் கேட்ட சுபத்திரை விசயனின் நலத்தைக் கேட்கவில்லை. தோழி கேட்கிறாள். அப்போது விசயன் தீர்த்த யாத்திரை சென்றிருப்பதாகவும் ஒருவேளை துவாரகைக்கு போயிருக்கலாம் என்றும் கூறுகிறான். சுபத்திரைக்கு புரிந்து விடுகிறது. யார் இந்த முனிவன். எல்லா முனிவர்களையும் அரண்மனை வரை விடுவதில்லையே? அதுவும் கண்ணனின் தங்கை தான் முனிவரை கவனிக்க வேண்டும் என்று கூறியதில்லையே? எல்லாம் கண்ணனின் திருவிளையாடல் என்று சுபத்திரை புரிந்து கொண்டாள். மகிழ்ந்தாள். உடனே கண்ணன் தோன்றினான். திருமணம் நடத்த தக்க சமயம் இது என உரைத்தான். ஏன் என்றால் அண்ணன் பலராமன் ஊரில் இல்லை. அவன் இருந்தால் மறுப்பு தெரிவிப்பான். எனவே உடன் திருமணம் நடத்தத் தீர்மானித்து இந்திரனை நினைக்கிறார்கள். இந்திரன் இந்திராணியுடன் வருகிறான். இப்படியாக கண்ணனது முயற்சியால் சுபத்திரை-அருச்சுனன் திருமணம் நடைபெறுகிறது. கண்ணன் உடனே அர்ச்சுனனிடம் உடனே இந்த ஊரைவிட்டு இந்திரப்பிரத்தம் போக வேண்டும் எனவும் சுபத்திரை தேரைச் செலுத்துவாள் என்றும் கூறுகிறான். காரணம் இருக்கும்.
சூர்யா: பெண்கள் தேரை ஓட்டுவார்களா தாத்தா?
தாத்தா: அந்த காலத்தில் போரின் போது தசரதருக்கு கைகேயி தேர் ஓட்டி உள்ளாள். நரகாசுரனைக் கொல்லும் போது சத்தியபாமா தேரை ஓட்டி இருக்கிறாள். அந்த காலத்தில் அரசகுமாரி என்றால் அவளுக்கும் எல்லா வித்தையும் தெரிந்திருக்கும். சரி. கதைக்கு வருவோம். கண்ணன் பலராமனுக்கு ஆள் அனுப்பி நடந்ததைத் தெரிவிக்கிறார். கொதித்தெழுகிறான் நீலாம்பரன் பலராமன். விரட்டிச் செல்கிறான். இதெல்லாம் நடக்கும் என்று கண்ணனுக்குத் தெரியுமே. வில்லும் அம்புமாக அர்ச்சுனன் தேரில் உள்ளான். போர் புரிய வந்த அனைவரையும் வென்று விரட்டிவிட்டு இந்திரப்பிரத்தம் வந்து சேருகிறான். பின்னர் கண்ணன் அண்ணனைச் சமாதானப்படுத்தி சீர்செனத்தியோடு இந்திரப்பிரத்தம் போய் சமாதானப்படுத்துகிறார்கள். அர்ச்சுனன்-சுபத்திரை இணையருக்கு அபிமன்னு என்னும் வீரமகன் பிறக்கிறான்.
சூர்யா: துரௌபதிக்கு ஒன்றும் குழந்தைகள் இல்லையா?
தாத்தா: ஏன் இல்லை. ஆண்டுக்கு ஒரு முறை ஒரு குழந்தை. ஐவருக்கும் ஐந்து குழந்தைகள் துரௌபதி மூலம். அவர்கள் பெயர் பிரதிவிந்தியன், சுதசோமன், சுருதகர்மா, சதாநீகன்,சுருதஸேநன். இவர்களை உபபாண்டவர்கள் என்றும் அழைப்பார்கள். எல்லோரும் வித்தைகள் பல கற்கிறார்கள். இவர்களில் பேர் சொல்லும் பிள்ளையாக அபிமன்னு இருக்கிறான். சரி மீதிக் கதையை நாளைக்குப் பார்ப்போம்.
No comments:
Post a Comment