தாத்தா: கண்ணனும் வில்லவனும் ஒருங்கே இணைந்து இந்திரப்பிரத்தத்தில் சிறிது காலம் இருந்தனர். கண்ணன் தங்கி இருக்கிறான் - கண்ணன் வருகிறான் என்றால் ஏதோ காரணம் உள்ளது என்று தானே பொருள். ஐவர் நாட்டில் நன்றாக அரசாட்சி செய்து கொண்டிருந்தபோது வன்னிவானவன் அங்கே அந்தண உருவில் வருகிறான்.
சூர்யா: வன்னிவானவன் என்றால் யார் தாத்தா?
தாத்தா: வன்னி என்றால் தீ. வன்னிவானவன் என்றால் தீக்கடவுள். அக்கினித் தேவன் என்று வடமொழியினர் கூறுவர். அந்தண உருவில் வந்தவன் யாசித்தான். கண்ணனும் விசயனும் கேட்பதை வழங்குவதாக வாக்களித்தனர். உடனே உரு மாறினான் வன்னிவானவன். தான் தீக்கடவுள் என்பதை தெரிவித்துக் கொண்டு "உந்து வெம் பசி பெரிது; வல்லே எனக்கு ஓதனம் இடுக!' என்றான். ஓதனம் என்றால் உணவு. பசியாக உள்ளது எனக்கு உணவு வேண்டும் என்று கூறி தன் உணவு எங்கே உள்ளது என்பதையும் கூறினான். "காண்டவம் என்னும் காட்டில் உள்ள உயிர்கள் தான் உண்ண வேண்டும் என்று கூறினான். கொண்டல்வானன் காவலாக உள்ளதால் தான் உண்ணமுடியவில்லை என்றும் கூறினான். கொண்டல்வானன் என்றால் மழைத்தெய்வம். மாரித்தெய்வம். வருணன் என்றும் சொல்வார்கள். தக்ககன் என்று ஒரு பாம்பும் அங்கு உள்ளது. நால்வகை மகீருகங்களும் உள்ளன. எனவே நீங்கள் உதவ வேண்டும்.'' என்றான். தக்ககன் என்பவன் எட்டு நாகங்களுள் ஒருவன்.
சூர்யா: எட்டு நாகங்கள் எவையெவை தாத்தா? நால்வகை மகீருகம் என்றால் என்ன?
தாத்தா: அனந்தன், கார்க்கோடகன், குளிகன், சங்கபாலன், தக்ககன், பதுமன், மகாபதுமன், வாசுகி ஆகியவை எட்டு நாகங்கள். மகீ என்றால் பூமியில் என்றும் ருகங்கள் என்றால் முளைப்பவை என்றும் பொருள். நால்வகை மகீருகங்கள் என்பவை மரம், கொடி, செடி மற்றும் புல் ஆகும். பொதுவாக பூமியி-ருந்து விளைபவை மகீருகங்கள் ஆகும். கண்ணன் ஒப்புதலுடன் 'உன் இச்சைப்படி கொள்க!' என்றான் விசயன். வன்னி வானவன் வில், அம்பு, வற்றாத தூணி ஆகியவற்றைத் தருகிறான். தூணி என்பது அம்புகளை வைக்கும் இடம். அம்பு ஆறாத்தூணி என்று சொல்வார்கள். பின்னர் அம்பராத்துணி என்று மாறிவிட்டது. நாளைக்குப் போரின் போது வேண்டும் என்பதால் இதைப் பெறத்தான் நடக்கிறது இந்தக் கண்ணனின் நாடகம் . விசயன் போர்க்கோலம் பூண்டு நாணொ- எழுப்பினான். அச்சத்துடன் பறவைகள் பறந்தன. அந்த காட்டிற்குள் இருந்த மயன் என்னும் அரக்கர் தச்சன் கண்ணனை அணுகி அடைக்கலம் அடைக்கலம் என்றான். கண்ணனும் கண்ணால் தன் ஒப்புதலைத் தெரிவித்து விட்டான். எனவே விசயன் அவனைக் கொல்லவில்லை. மயன் தப்பிவிட்டான். தக்ககன் இந்திரனுக்கு வேண்டியவன். எனவே இந்திரன் உடனே வந்தான். கண்ணனும் தன் மகன் விசயனும் காட்டை எரிய விட்டு வேடிக்கை காண்பதைக் கண்டான். தக்ககனைக் காக்க வேண்டிய கடமை இருந்தால் மகன் என்றும் பாராமல் மழைத் தெய்வத்தை அழைத்து மாரி பொழிந்து தீயை அணைக்கும்படி கட்டளையிட்டான். பன்னிரு ஆதித்தியர்களை அழைத்துப் போரிடும்படிக் கட்டளையிட்டான். விசயன் உடனே அம்புப் பந்தல் ஒன்று அமைத்து மழைநீர் உள்ளே வராதபடி தடுத்தான். கோபம் கொண்ட இந்திரன் அனைத்து தேவர்களுடன் வந்து போரிடத் துவங்கினான். இதற்குள் தக்கனின் மனைவியை விசயன் அம்பெய்து கொன்றான். ஆனால் அந்த பாம்பின் வாயில் இருந்து அதன் குட்டி தப்பியது. அதன் பெயர் அச்சுவசேனன். அது உடனே விசயனின் எதிரி கன்னனிடம் சென்று அடைக்கலம் புகுந்து விசயனைப் பழி வாங்க காத்திருந்தது. மேதினியில் நினைத்ததைச் சாதிக்கும் திறமை உடைய பாம்புக் குட்டி அது. விசயனுக்கு அது தான் எமன் என்று சொல்லலாம். கொல்லாமல் விடாது அந்த குட்டிப் பாம்பு. வானொலி - ஒன்று வந்தது. அது கூறியதைக் கேட்ட இந்திரன் உடனே இந்திரலோகம் திரும்பினான்.
சூரியா: மேதினி என்றால் என்ன? வானொலி - என்றால் என்ன? அது என்ன கூறியது? 12 ஆதித்தியர்கள் யார்? ஏன் இந்திரன் போரை நிறுத்தினான்? சொல்லுங்க தாத்தா.
தாத்தா: மேதினி என்றால் உலகம். மேதஸ் என்பது ஒரு வடமொழிச் சொல். கொழுப்பு என்று பொருள். மதுகைடபரை திருமால் மாயையின் வல்லமையுடன் வதைத்த போது அவர்களின் கொழுப்பு பூமியில் விழுந்தது. அப்போது முதல் பூமிக்கு மேதினி என்று ஒரு பெயர் வந்துவிட்டது. பன்னிரு ஆதித்தியர்கள் இந்திரன், தாதா, பர்ஜந்யன், த்வஷ்டா, பூஷா,அரியமா, பகன், விவஸ்வான், விஷ்ணு, அம்சுமான், வருணன், மித்ரன் ஆகியோர். வானொலி - என்றால் ஆகாயவாணி என்றும் அசரீரி என்றும் வடமொழியில் கூறுவார்கள். அது கண்ணனும் விசயனும் நரநாராயணர்கள் என்பதைக் கூறியது.
'தமரினும் இனிய தக்ககன் முதலே தப்பினன்,
குரு நிலம் சார்ந்தான்;
குமரனும், நும்மால் உய்ந்தனன்; தூமக் கொடியனும்
கொண்டலுக்கு அவியான்;
நமர்களில் இருவர், நரனும் நாரணனும்; நமக்கும் இங்கு
இவர் சிறிது இளையார்;
அமரினை ஒழிமின், அமரினை ஒழிமின், அமரரும்
அமரர் நாதனுமே!'
என்பார் வில்லியார். "தக்ககன் தப்பிவிட்டான். அவன் மகன் பிழைத்து விட்டான். மழையால் இந்த தீயை அணைக்க முடியாது. போரிடும் இருவரும் இறைவனின் அம்சங்கள். எனவே அவர்களைத் தோற்கடிக்க முடியாது. நிறுத்து போரை'' என்றது வானொலி -. எனவே தான் இந்திரன் போரை நிறுத்திவிட்டு வானுலகு திரும்பினான்.
இந்தப் போரினைக் கண்ட அனைவரும் விசயனின் வெற்றியைப் பாராட்டினார்கள். விசயனுக்கு வற்றாக் கணைகள் கிடைத்தன. கூடவே நாகத்தின் பகையும் கிட்டியது. நாளைக்கு மீதக் கதையைச் சொல்கிறேன்.
No comments:
Post a Comment