நாம் நமது பிறப்பையோ, இறப்பையோ மிகவும் பொருட்படுத்தாது, நாம் வாழும் இயல்பு நிலையை ஆராய்ந்து பார்க்கக் கற்றுக் கொள்ள வேண்டும். எது எதற்கோ நாம் நேரம், காலம் என்று செலவழிக்கிறோம், ஆனால் இதைப் புரிந்து கொள்ள முயற்சி செய்வதற்கு மிகவும் யோசிப்போம். மதுரையில் வாழும் நாம் என்றாவது இரமணர் வசித்த இல்லத்தைப் பார்த்திருக்கோமா? அந்த இல்லம் எங்கு உள்ளது என்றாவது நமக்குத் தெரியுமா? ஆம் அந்த இல்லம் அங்கயற்கண்ணி ஆலயத்தின் எதிர்புறம் உள்ள தெருவில் உள்ளது. சிறு சிறு நகைக்கடைகளுக்கு நடுவில் ஒரு சிறிய பிள்ளையார் கோவில் இருக்கும். அதற்கு எதிரில் உள்ள இல்லத்தைநோக்குங்கள். அங்கு பெயர்ப் பலகை இருக்கும். உள்ளே செல்லுங்கள். கண் மூடி துதித்துப் பாருங்கள். உங்கள் அனுபவம் வித்தியாசமாக இருக்கும். அந்த இல்லத்தின் மாடி அறையில் தான் இரமண மகரிஷிக்கு அந்த மரண அனுபவம் தோன்றி ஞான நிலையை நோக்கிச் செல்லும் எண்ணம் உதித்து உள்ளது.
நமது பிறப்பு மற்றும் மரணம் பற்றி அந்த பெருமகனார் என்ன சொல்கிறார் என்று பார்க்கலாமா?
மரண பயம் மிக்க உள அம்மக்கள் அரணாக
மரணபவம் இல்லா மகேசன் - சரணமே
சார்வார் தம் சார்வோடு தாம் சாவுற்றார் சாவு எண்ணம்
சார்வரோ சாவாதவர்
“உள்ளது நாற்பது” என்ற அவர் நூலில் வரும் பாடல் இது.
“நான் இறந்து விட்டேன், இந்த உடலை இப்போது எடுத்துக் கொண்டு போய் மயானத்தில் எரித்து விடுவார்கள்; ஆனால் நான் இன்னும் இதோ இருக்கிறேனே? ஆக நான் இந்த உடல் இல்லை”
என்ற தன் சத்து-சித்து-ஆனந்த நிலையை சிறு வயதிலேயே உணர்ந்த அனுபவத்தின் பேரில் எழுதப்பட்டது என்றே நாம் கொள்ளலாம். இச்செய்யுள் நமக்கு என்ன சொல்கிறது?
மரண பயம் மிகத் தீவிரமாக உள்ள நல்ல குணமுடைய மனிதர்கள், பிறப்பு இறப்பு என்ற இரண்டும் இல்லாத ஒரு பாதுகாப்புள்ள கோட்டையாக விளங்கும் இறைவனின் கால்களைப் பிடித்து இறைஞ்சி அடைக்கலம் அடைவார்கள். தனது பந்த பாசங்கள், பற்றுக்கள் இவைகளோடு அடைக்கலம் அடைந்தவர்கள் தம்முடைய ஜீவ பாவமும் அறவே ஒழிந்தவர் ஆவார்கள். அப்படிச் சாவாத தன்மையடைந்த ஜீவன் முக்தர்கள் மறுபடியும் மரணத்தைப் பற்றிய எண்ணத்தை அடைவார்களோ?
சாதாரணமாக ஒருவனின் வைராக்கியத்தைச் சொல்லும்போது பிரசவ வைராக்கியம், மயான வைராக்கியம் என்று இரண்டைச் சொல்வார்கள். ஒன்று பிறப்பையும், மற்றது இறப்பையும் பற்றியது. இது இரண்டுக்கும் இடையில் தானே வாழ்க்கை அமைகிறது. அதனால் இவ்விரண்டையும் சொல்லி விட்டால் எல்லாம் சொன்னது போல என்று பெரியோர்கள் நினைத்திருக்க வேண்டும்.
ஒருவன் தன் மனைவிக்குக் குழந்தை பிறக்கும் போது படும் கஷ்டத்தை நினைத்துக்கொண்டோ, அல்லது ஒரு பெண்ணே தனது நிலையை நினைத்து அவதிப்படும்போதோ, இன்னுமொரு குழந்தை வேண்டாமே என்று நினைப்பதுதான் பிரசவ வைராக்கியம். இது நமது நாட்டில் பெண்களுக்கு உறுதியாக ஏற்படக் கூடிய ஒன்று. அமெரிக்கத் திருநாட்டில் பிரசவத்தின் போது கணவனும் உடன் இருக்க வேண்டும் என்று மருத்துவர் கூறுகிறார். மனைவி அல்லல் படுவதை அந்த நாட்டில் கணவன் காண முடிகிறது. அதனால் பிரசவ வைராக்கியம் ஆண்களுக்கும் அந்த நாட்டில் கிடைக்க வாய்ப்பு உள்ளது. சிற்றின்பத்தின் காரணமாக மனைவி படும் துன்பத்தை நேரில் பார்ப்பதால் குழந்தையின் பேரில் அந்த தந்தைக்கு அதிக ஈடுபாடு வருகிறது. குழந்தையின் மழலையில் அது காலப் போக்கில் கரைந்து போகலாம்.
அதுபோலவே ஒருவன் தனது உற்றாரோ, சுற்றமோ இறந்து போகும்போது, மயானத்தில் இட்டு விட்டு வரும் போது நமக்கும் ஒருநாள் இப்படித்தானே நடக்கும், இனி அனைவருடனும் மிக அன்பாகவும், கருணையுடனும் இருக்க வேண்டும் என்று நினைப்பது மயான வைராக்கியம். பணம் - புகழ் எதுவும் உடன் வராது என்பது விளங்கும். அப்படியானால் இறுதி வரை எது வரும்? நான் யார்? அழியும் இந்த உடலா? அழியாத உயிரா? ஏன் இந்தப் பிறவி? மற்ற உயிரினங்களையும் இறைவன் படித்து உள்ளானே? ஓர் அறிவு முதல் ஐந்து அறிவு வரை உள்ள உயிரனமாக தான் பிறக்காது பகுத்து அறியும் ஆறாவது அறிவுடன் பிறந்தது ஏன் என்ற கேள்வி பிறக்கும். இதுவும் பின்னாளில் ஓரளவாவது கரையக் கூடும். சிலர் தொடர்ந்து நான் யார் நான் யார் என்ற கேள்வியைத் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருப்பார்கள்.
ஆனாலும் ஒருவரை நல் வழியில் கொண்டு வருவதற்கு, மரண பயத்தைப் போன்றதொரு சாதனம் வேறு கிடையாது. ஞானம் பெறுவதற்கும், நாம் உலகில் நல்லதையே நினைத்து, நல்லதையே பேசி, நல்லதையே செய்வதற்கும் அது ஒரு பயனுள்ள சாதனம் தான்.இரமணருக்கு ஞானம் அப்படித்தான் வந்தது. மற்றவர்கள் நல்ல வழியில் செல்வதற்காவது அதை உபயோகப்படுத்திக் கொண்டால் அவர்களுக்கு நன்மையே.
அப்படி வரும் மரண பயத்தைப் பற்றி சிறிதேனும் யோசித்தவர்கள் நன்கு தெளிவு அடைவார்கள். ஏனெனில், மரணம் என்பதை யாரும் தவிர்க்க முடியாது. ஒன்று சொல்வார்களே? வாழ்க்கையில் நிச்சயமானது என்று ஒன்று உண்டென்றால் அது மரணம்தான் என்று. இதை விட உண்மையான வாக்கியம் வேறு ஒன்று உண்டோ? தவிர்க்க முடியாது என்பதை நினைவில் கொண்டு மேலும் அதை அலசினால், அப்படிப்பட்ட மனிதர்களில் பலர் முதலில் செய்வதென்ன?
இறைவனைத் துதிப்பார்கள். ஏன்? மரணம் என்பது அவர்களைப் பொறுத்தவரை ஒரு முடிவினைக் குறிக்கிறது. அதனால் முடிவே இல்லாத இறைவனைத் துதித்து முடிவுள்ள தமக்கு ஒரு பாதுகாப்பினைத் தேடுகிறார்கள். அப்படித் தேடுபவர்கள், முடிவில்லாத இறைவனிடம் அடைக்கலம் அடைகிறார்கள் என்றுதான் பொருள். அந்தச் சரணாகதி ஒரு முழுச் சரணாகதி என்றால் இறைவனை நாடுபவர்களும் இறைவனைப் போலவே முடிவற்றவர்களாக ஆவதால், அவர்களுக்குச் சாவு என்று ஏதும் உண்டோ என்று கேட்கிறார் இரமணர். அதற்குப் பின்னும் அவர்களுக்கு மரண பயம் வருமென்றால், அவர்களது சரணாகதி முற்றான சரணாகதி இல்லை என்பதைத் தவிர வேறென்ன சொல்வது?
அப்படியென்றால் அவர்கள் தங்கள் சரணாகதியை முற்றாக்கும் முயற்சியில்தான் ஈடுபட வேண்டும். எவ்வளவோ முயன்றுதான் பார்க்கிறேன், முடியவில்லையே என்று பலர் சொல்வார்கள். சிலர் இப்படித்தான் எனக்கு இருக்கும் போலிருக்கிறது, என்று தம் வினையை நொந்து கொள்வார்கள். அதற்கு இரமணர் என்ன சொல்வார் என்று பார்க்கலாம்.
வினை முதல் நாம் ஆயின் வினைப் பயன் துய்ப்போம்
வினை முதல் ஆரென்று வினவித் - தனை அறிய
கர்த்தத்துவம் போய்க் கருமம் மூன்றும் கழலும்
நித்தமாம் முக்தி நிலை
செய்யப்படும் செயல்களின் கர்த்தா நாமே என்று எண்ணினால், அந்தக் கர்மங்களினால் விளையக்கூடிய பயனையும் நாமே அனுபவிப்போம். இந்தக் செயல்களைச் செய்யும் கர்த்தாவாகிய நான் யார் என்று விசாரித்து தனது உண்மை நிலையை அறிந்தால், செயல்களைச் செய்யும் கர்த்தா நான் அன்னும் அகம்பாவம் நீங்கும். நான் என்ற நினைப்பு - எண்ணம் நம் மனதிலிருந்து அகல வேண்டும். அத்துடன் சஞ்சிதம், ஆகாமியம், பிராப்தம் என்ற மூன்று கர்மங்களும் அழிந்துவிடும். முன்வினை அழியும். இப்பிறப்பில் உள்ள வினை அகலும். இரட்டைகளிருந்து - நல்லது, கெட்டது - என்று பகுத்துப் பார்க்காமல் எல்லாம் இறைவன் நமக்குத் தந்த அனுபவம் என்று ஏற்றுக் கொள்ள வேண்டும். இன்பங்கள் வரும் போது நாம் இறைவனை நினைப்பது இல்லை. துன்பம் வரும் போது மட்டும் துன்பத்தின் காரணத்தைத் தெரிந்து கொள்ள ஜோதிடம் பார்க்கிறோம். என் நல்லது நடந்தது என்று யாராவது ஜோதிடம் பார்கிரோமா? கிடையாது. எல்லாம் இறைவன் செயல் என்று ஏற்றுக்கொள்ளும் பற்றற்ற நிலை நோக்கி சிறிது சிறுதாக நாம் பழக வேண்டும். இந்த நிலையே நித்தியமாகிய முக்தி நிலை.
இது “நான்” எனும் கணவன் இறந்துவிட்டால் அவனது மூன்று மனைவிகளும் கைம்மை அடைவதைப்போல, கர்த்தா நான் இல்லை என்றால் கர்மம் மூன்றும் நம்மை ஒட்டாது. இது முன்பே இரமணர் சொன்ன கருத்துதான். ஆனாலும் இதில் ஒரு சிறப்பு என்ன என்றால், அப்படி அவர் முன்பு சொன்னது ஞானிகள் விஷயத்தில். இப்போது அவர் சொல்வதோ எவர் விஷயத்திற்கும் பொருந்தும். இதுதான் இரமணர் போன்ற ஞானிகளுக்கும் நமக்கும் உள்ள வித்தியாசம். அவர்கள் கண்ணில் ஞானி என்றோ, அஞ்ஞானி என்றோ எந்தப் பாகுபாடும் கிடையாது. “நான்” எனும் தன்முனைப்பாகிய அகந்தையை அழித்துவிட்டு ஒருவன் இருக்கிறான், இன்னொருவன் அதை அழிக்க முடியாது இருக்கிறான். அதைத் தவிர வேறு வித்தியாசம் ஏதும் இல்லை.
ஆக நம்மைப் பொறுத்தவரை நாம் ஞானி ஆவதற்கு ஒரு எளிதான வழி சொல்லியிருக்கிறார். அதாவது, நாம் செய்யும் செயல் எதுவானாலும் “அது அவன் செயல்” என்று உளமார நினைத்து அவனுக்காகவே செய்ய வேண்டும். அது போதும். இதுவேதான் முற்றான சரணாகதி என்று சொல்லப்படுவது அல்லவா? அதில் சிறிது தவறி நாம் செய்கிறோம் என்றோ, அவனா செய்கிறான் என்றோ சிறிதாவது சந்தேகம் அடைந்தாலோ, நாம் நமது வினையைக் கூட்டிக் கொள்கிறோம் என்றே ஆகும். அப்போது அதன் பலனையும் நாமே எதிர்கொள்ள வேண்டும் - இப்பிறவியிலோ அல்லது எப்பிறவியிலோ. அப்படி என்றால் பிறந்தவன் எவன் என்று தெரிந்து கொள்ள வேண்டுமா?
பிறந்தது எவன் தன் பிரம்ம மூலத்தே
பிறந்தது எவண் நான் என்று பேணிப் - பிறந்தான்
அவனே பிறந்தான் அவன் நிதம் முனீசன்
அவன் நவன் நவன் தினமும் நாடு
எவனொருவன் தான் பிறந்தது எங்கே என்று விசாரித்து, தனது இருப்பிடமாகிய பிரம்ம மூலத்தில் பிறந்தானோ (மூலத்தை அடைந்தானோ) அவனே பிறந்தவன் ஆவான். அப்படிப் பிறந்த அவன் நித்தியமான முனீசன் ஆவான். அவன் எப்போதும் புதுமையோடு விளங்குவான் என்று அறியவேண்டும்.
நான் உடல் இல்லை - மனம் இல்லை -புத்தி இல்லை …. என்று இவ்வாறான நிலைகள் எல்லாவற்றையும் கடந்து எவன் தனது “என்றும் உள்ள” வடிவத்தை உணர்ந்து அதிலேயே நிலைத்து நின்று, சகல உயிரினங்களையும் அவ்வாறே காண்கிறானோ, அவனே பிறப்பு - இறப்பு எனும் நிலைகளைக் கடந்த சிறப்பை அடைந்தவன். அதுவரை அவன் மீண்டும் மீண்டும் வந்து இறுதியில் இந்த நிலையையே அடைகிறான். “அடைகிறான்” என்பதைவிட “என்றும் இப்படியே உள்ளோம்; ஆனாலும் அதை உணராது இருந்தோம்” என்பதைத் தெரிந்து கொள்கிறான். இதுவே பேரறிவு எனப்படுகிறது. எதைத் தெரிந்து கொண்டால் மேலும் தெரிவதற்கு ஏதுமில்லையோ அதைவிட சிறப்பு ஏதும் உண்டோ?
அந்தச் சிறப்பை அடைபவர்கள் எந்த வழி அவர்களுக்கு இயல்பாக இருக்கிறதோ அதன் மூலம் அடையலாம், வேறு வழிகள் வாயிலாய் வந்து சேர்ந்தாலும் மற்ற வழிகளின் தாக்கங்களையும் அவர்கள் அப்போது உணரலாம். ரமணர் உறுதியாகக் கூறுகிறார்:
ஆதலினால் அறிவு மயமாம் சுத்த
இதயத்தே அகத்தைச் சேர்க்கும்
சாதனையால் வாதனைகளொடு வாயு
ஒடுக்கமுமே சாருந் தானே
அறிவு சொரூபமான தூய சச்சிதானந்த இதயத்தில் மனதை அதனிடம் சேர்க்கும் பயிற்சியினால் வாசனைகளின் அழிவும், பிராண வாயுவின் ஒடுக்கமும் தானாகவே அடையக்கூடும்.
ஒருவன் தனது இயல்பான வழிகளில் செல்லும் மனத்தைக் கட்டுப் படுத்தியோ, பிராண வாயுவை அடக்கிச் செய்யும் பயிற்சிகள் மூலமோ, இறைவனிடம் பக்தி செலுத்தியோ, தம் தம் கடமைகளைச் செவ்வனே ஆற்றியோ, வேறு எந்த வழிகளிலோ சென்று தனது ஆன்ம நிலையை எய்தலாம். ஆன்ம நிலையை எய்தியவன் மேலே சொன்ன அனைத்தும் தமக்குப் பொருந்துகிறது என்றும் பின்னர் உணரலாம். காரணத்தினால் காரியத்தையும், காரியத்தினால் காரணத்தையும் முன்னும் பின்னுமாக இருவரும் உணர்வார்கள்.
நான் இதைச் செய்து அதை அடைந்தேன் என்று இங்கு கூற வாய்ப்பில்லை. நான் என்னை விசாரித்துத் தன்னை உணர்ந்தேன், ஆனாலும் அன்றும் இன்றும் எப்போதும் அப்படியே உள்ளேன் என்று சொல்லாமல் சொல்லி, நினையாமல் நினைப்பதே இங்கு உள்ள சிறப்பு.
சரி நேரம் கிடைத்தால் மதுரையில் உள்ள அன்பர்கள் அவர் வசித்த இல்லத்திற்குச் சென்று வாருங்கள். அவர் பிறந்த இடம் கூட மதுரைக்கு அருகில் உள்ளது. காரியாபட்டியில் இருந்தும் அருப்புக்கோட்டையில் இருந்தும் பேருந்து வசதி உள்ளது. திருச்சுழி என்பது அந்த ஊரின் பெயர். ஒரு பெரிய சிவன் கோவிலும் உள்ளது. பாண்டிய நாட்டுத் தலங்களிலே ஒன்று இந்த தலம்.
No comments:
Post a Comment