Tuesday, July 26, 2011

நோய்களுக்கான காரணங்கள்

இக்காலத்தில் உடல்நலம் இல்லை என்றால் உடன் பெரிய மருத்துவ மனைகளுக்குச் செல்கிறோம்.  இருக்கவே இருக்கிறது மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்.  எனவே அச்சப்படுவதில்லை.  பெரிய பெரிய மருத்துவரைப் பார்க்கச் செல்கிறோம்.  ஆனால் இறைவன் என்னும் பெரிய மருத்துவரை உள்ளம் உருக முதலில் நினைக்க வேண்டும்.  முற்பிறவியில் அறிந்தோ அறியாமலோ ஏதாவது தவறு இழைத்து அதன் காரணமாக இப்பிறவியில் நோய் வந்திருந்தால் தவறைப் பொறுத்து நோயைத் தீர்த்து வைக்கும்படி இறைவனை வேண்ட வேண்டும்.

முற்பிறவியில் பெரியவர்களையும் ஆசானையும் நிந்தித்து இருந்தால் துன்புறுத்தி இருந்தால் காச நோய் ஏற்படும்.

பிறர் உணவைத் திருடி மற்றவர்கள் பசியால் வாடுவதை வேடிக்கை பார்த்திருந்தால் இப்பிறவியில் உடல் இளைத்தே காணப்படும். 

பெரியவர்களைக் கொல்லுதல், பெண்களை அவமரியாதை செய்தல், மிகவும் தெரிந்தவர்களுக்கே விஷம் கொடுத்து அவர்களைக் கொல்லுதல் இப்படி கொடுஞ் செயல்களைப் புரிந்திருந்தால் வெண்குஷ்டம் வரும்.

பொய் சாட்சி கூறினால் முகத்தில் நோய் வரும்.

பிறர் சொத்தை அபகரித்தால் - அதுவும் கோவில் சொத்தை அபகரித்தால் மூலநோய் அவசியமாக வரும்.

நன்றி மறந்தால் - பிறர் மனைவியைத் தவறான கண்ணோட்டத்துடன் கண்டால் கண் நோய் ஏற்படும்.

பிறரைப் பற்றி இல்லாதது பொல்லாதது கூறி புறம்கூறுவதை ஒரு பழக்கமாகக் கொண்டிருந்தால் காது நோய் உண்டாகும்.

ஆசிரியரைத் தண்டித்தாலும் பிறர் உணவைத் திருடினாலும் நீரிழிவு நோய் வரும்.

காய்கனிகளைத் திருடினால் - மற்றவரை அவமானப் படுத்தினால் உடலில் புண்கள் உண்டாகும்.

இப்படி முற்பிறவியில் நாம் செய்த தவறுகளுக்குத் தண்டனையாக இப்பிறவியில் நோய்கள் உண்டாகின்றன என்று பெரியோர் கூறுகின்றனர்.  எனவே மருத்துவரைப் பார்ப்பதோடு இறைவனிடம் முறையிட்டு அறிந்தோ அறியாமலோ இப்பிறவியிலோ முற்பிறவியிலோ தவறுகள் செய்திருந்தால் மன்னிக்கும்படியும் அப்படிப்பட்ட தவறுகளை இனி செய்யாமல் தடுக்கும் படியும் இறைவனிடம் முறையிடுங்கள்.  இறைவன் மனமிரங்கினால் நோய்கள் உடனடியாகத் தணியும்.  இறைவனிடம் கையேந்துங்கள்.  அவன் இல்லை என்று சொல்லுவதில்லை.

ஆடி அமாவாசையின் சிறப்பு

தென்திசைக் காலத்தில் வருவது தான் ஆடி அமாவாசை.  பகலவன் வடக்கு நோக்கித் தன் பயணத்தை துவக்கும் நாள் தான் தை அமாவாசை.  அதே போல கதிரவன் தெற்கு நோக்கித் தன் பயணத்தை துவக்கும் காலம் தான் ஆடி அமாவாசை.  ஆடி அமாவாசை என்பது நமது முன்னோர்களை வழிபட மிக உகந்த நாள் ஆகும்.

முன்னோர் வழிவாட்டை விரதம் இருந்து காலையிலேயே துவக்கிவிட வேண்டும்,   நதிக்கரையோ கடற்கரையோ சென்று முன்னோர்களை வழிபட வாய்ப்பு கிடைத்தால் மிக நல்லது.  அல்லது ஒரு குளக்கரையையாவது தேர்ந்தெடுக்க வேண்டும்.  காலையில் தர்ப்பணம் செய்ய வேண்டும்.

பின்னர் வீட்டிற்கு வந்து முன்னோர்களின் படங்கள் இருந்தால் மாலையிட்டு விளக்கேற்ற வேண்டும்.  ஒரு இலையைப் பரப்பி அதில் முன்னோர்கள் விரும்பி உண்ட உணவு வகைகளை வைத்து அவர்களுக்குப் படைக்க வேண்டும்.  பின்னர் காக்கைக்கு உணவு வைத்துவிட்டு .     -  மற்றவர்களுக்கு அந்த உணவை பிரசாதமாகக் கொடுத்து அதன்பின்வீட்டில் மூத்தவர் அந்த இலையில் அமர்ந்து உண்ண வேண்டும்.   சூரியனும் சந்திரனும் இணைந்து நிற்கும் நாள் தான் அமாவாசை.  எனவே தான் நம் தாய்வழி மற்றும் தந்தைவழி முன்னோர்களை நாம் நினைக்க ஏற்ற நாள் அமாவாசைத் திருநாளே.  அதிலும் இந்த ஆடி அமாவாசை மிகச் சிறப்பான நாள் ஆகும்.

“ஐயா - ஆடி அமாவாசை அன்று எனக்கு முக்கியமான பணி உள்ளது.  எனவே செய்ய முடியவில்லை.  அமாவாசை வரும்போதெல்லாம் ஏதாவது பிற பணிகள் குறுக்கிடுகின்றன.  என்ன செய்வது”  என்று கேட்டார் ஒரு நண்பர்.    திருவாரூரிலிருந்து மயிலாடுதுறை செல்லும் சாலையில் பூந்தோட்டம் என்னும் கிராமம் உள்ளது.  அருகில் கூத்தனூர் உள்ளது.  சிறிது தூரத்தில் திருவீழிமிழலை என்னும் சிவத்தலம் உள்ளது.  இப்பகுதியில் உள்ளது தான் செதலபதி என்னும் ஊர்.  இங்கு முக்தீஸ்வரர் கோவில் என்று ஒரு கோவில் உள்ளது.  இந்த கோவிலில் என்ன விசேஷம் என்றால் இந்த இறைவனை சூரியனும் சந்திரனும் ஒரே நேரத்தில் வணங்கியதாக வரலாறு உள்ளது.   எனவே இதை என்றும் அமாவாசைத் திருத்தலம் என்று அழைக்கிறார்கள்.  இத்தலத்தில் இராமபிரானே வந்து தன்னுடைய தந்தைக்கு எள்ளும் நீரும் இறைத்ததாக வரலாறு உள்ளது.  அப்படிப்பட்ட இடத்திற்கு குடும்பத்துடன் சென்று வழிபட்டு வாருங்கள் என என் நண்பரிடம் தெரிவித்தேன்.  நெருங்கி விட்டது ஆடி அமாவாசை.  எல்லோரும் முன்னோர்களை வழிபடுங்கள்.  பித்ரு தோஷத்திலிருந்து விமோசனம் பெறுங்கள்.

இறைவனை வலம் வரும் முறை

இறைவனை வலம் வரும் போது நமது இட்டப்படி வலம் வரக்கூடாது.
எந்தெந்த இறைவனை எத்தனை முறை வலம் வரவேண்டும் என நியதி உள்ளது.  இதோ அந்த நியதி

விநாயகர்               - 1 அல்லது 3 முறைகள்
கதிரவன்               - 2 முறைகள்
சிவபெருமான்          - 3,5,7 முறைகள் அதாவது ஒற்றைப்படை
முருகன்                - 3 முறைகள்
தென்முகக் கடவுள்     - 3 முறைகள்
அம்பாள்                - 4,6,8 (இரட்டைப்படை)
திருமால்               - 4 முறை
இலக்குமி              - 4 முறை
அனுமன்               - 11 அல்லது 16 முறைகள்
நவக்கிரகம்             - 3 அல்லது 9 முறைகள்
அரசமரம்               - 7 முறைகள்

நாக கவசம் - NAGA KAVASAM

பல பேர் சோதிடர்களிடம் போவார்கள்.  உங்களுக்கு நாகதோசம் உள்ளது.  எனவே நீங்கள் காளத்திக்குப் போங்கள் என்பார் ஒருவர்.  மற்றொருவர் வேறு ஊரைச் சொல்வார்.  நாகதோசம் உள்ளவர்கள் பயன்பெற நாகக் கவசம் இங்கே தரப்பட்டுள்ளது.

நாக தெய்வக் கவசத்தைப் பக்தியுடன் படிக்க வேண்டும்.  மனதில் நாகராசன்-நாகராணி ஆகியோரை நினைத்துக் கொள்ள வேண்டும். 

நாக தெய்வக் கவசத்தை நானும் பாடிப் பலன் பெறவே
பாகம் பெண்ணுருக் கொண்டானின் பாலன் கணபதி காப்பாமே.

வணங்கும் பக்தருக்கு அருளுகிற வளம் தரும் நாகராசாவே-நாகராணியே
இணக்கமுடனே கிழக்கினிலே எம்மைக் காப்பாய்
தெற்கினிலே சுணக்கமின்றிச் சுகந்தருவாய்
சோதி மறையும் மேற்கினிலே மணக்க வந்து காப்பாயே
வடக்கிலும் காத்து வளம் தருவாய்

தாயாய் வந்து காத்திடுவாய் தரணியில்
மேல் கீழ் ஆகாயம் நீயே
செல்வம்தனைத் தந்து நிலையாய் என்றும் காத்திடுவாய்
சேயாய் எம்மைப் பாராட்டி சிரசைக் காப்பாய்
நெற்றியோடு வாயைப் புருவ நடுவினையும்
வடிவுடன் கண்கள் தமைக் காப்பாய்

கன்னம் காது நாசியுடன் கன்னல் மொழிதரு நா பற்கள்
மின்னும் நாகராசாவே-நாகராணியே விரைந்து காப்பாய்
முகம் கழுத்தும் இன்னல் தீர்க்கும் எழில்கோவே இதமாய்க் காப்பாய்
தோள், கைகள் மின்னல் வேகம் உடையோய் நீ மேன்மையுடனே காத்திடுவாய்

முலைகள் மார்பு நெஞ்சினையும் முதுகு வயிறு நாபியையும்
இல்லையோ என்னும் இடுப்பினையும் இருப்பிடத்துடனே குறிகளையும்
நிலையில் உயர்ந்தோய் நீ காப்பாய்
நீள்தொடை முழந்தாள் ஆடுசதைமலையே
கால்நகம் கணைக்கால்கள் மகிழ்ந்தே காப்பாயே

எங்கள் உரோமம் நரம்பினையும்
எலும்பு தசைகளை இரத்தம்
திங்கள் இரவு உள்ளவரை தினமும் காப்பாய்
இரவு பகல் மங்கும் நேரம் மலர்நேரம் மருளும் நேரம் மகிழ்நேரம்
அங்கம் அனைத்தும் காப்பாயே அரவத்தேவே காப்பாயே

எட்டுத்  திசையிலும் காப்பாயே
எங்கள் பகையை அழிப்பாயே
துட்டப் பேய்கள் செய்வினைகள்
தொடாது ஓடச் செய்வாயே
பட்டுப்போகச் செய்கின்ற பிணிகள் எதுவும் அணுகாது
விட்டு விலகச் செய்வாயே
விடங்கள் ஏறாது அருள்வாயே

விண்ணவர் ஏத்தும் வேலவர்க்கும் விக்னம் அகற்றும் விநாயகருக்கும்
எண்ணிய கருமம் முடிக்கின்ற எங்கள் இறைவன் இறைவிக்கும்
புண்ணியம் சேர்க்கும் மாலவர்க்கும் பணிகள் புரியும் நல்லரவே
எண்ணியதெல்லாம் எமக்கு ஈந்து எங்கும் எதிலும் காப்பாயே

சொல்லிய பக்தன் இவன் செஞ்சொல் கவசம்
தினம் சொன்னால் நல்ல புத்திரப்பேறு தரும்
நாகதோசம் நீங்கிவிடும்,
இல்லற சுகமும் இயைந்து வரும்
எல்லா வளமும் மிகுந்து வரும்
வல்லன எல்லாம் கைகூம்
வாழ்வில் வளமும் பெருகிடுமே