தென்திசைக் காலத்தில் வருவது தான் ஆடி அமாவாசை. பகலவன் வடக்கு நோக்கித் தன் பயணத்தை துவக்கும் நாள் தான் தை அமாவாசை. அதே போல கதிரவன் தெற்கு நோக்கித் தன் பயணத்தை துவக்கும் காலம் தான் ஆடி அமாவாசை. ஆடி அமாவாசை என்பது நமது முன்னோர்களை வழிபட மிக உகந்த நாள் ஆகும்.
முன்னோர் வழிவாட்டை விரதம் இருந்து காலையிலேயே துவக்கிவிட வேண்டும், நதிக்கரையோ கடற்கரையோ சென்று முன்னோர்களை வழிபட வாய்ப்பு கிடைத்தால் மிக நல்லது. அல்லது ஒரு குளக்கரையையாவது தேர்ந்தெடுக்க வேண்டும். காலையில் தர்ப்பணம் செய்ய வேண்டும்.
பின்னர் வீட்டிற்கு வந்து முன்னோர்களின் படங்கள் இருந்தால் மாலையிட்டு விளக்கேற்ற வேண்டும். ஒரு இலையைப் பரப்பி அதில் முன்னோர்கள் விரும்பி உண்ட உணவு வகைகளை வைத்து அவர்களுக்குப் படைக்க வேண்டும். பின்னர் காக்கைக்கு உணவு வைத்துவிட்டு . - மற்றவர்களுக்கு அந்த உணவை பிரசாதமாகக் கொடுத்து அதன்பின்வீட்டில் மூத்தவர் அந்த இலையில் அமர்ந்து உண்ண வேண்டும். சூரியனும் சந்திரனும் இணைந்து நிற்கும் நாள் தான் அமாவாசை. எனவே தான் நம் தாய்வழி மற்றும் தந்தைவழி முன்னோர்களை நாம் நினைக்க ஏற்ற நாள் அமாவாசைத் திருநாளே. அதிலும் இந்த ஆடி அமாவாசை மிகச் சிறப்பான நாள் ஆகும்.
“ஐயா - ஆடி அமாவாசை அன்று எனக்கு முக்கியமான பணி உள்ளது. எனவே செய்ய முடியவில்லை. அமாவாசை வரும்போதெல்லாம் ஏதாவது பிற பணிகள் குறுக்கிடுகின்றன. என்ன செய்வது” என்று கேட்டார் ஒரு நண்பர். திருவாரூரிலிருந்து மயிலாடுதுறை செல்லும் சாலையில் பூந்தோட்டம் என்னும் கிராமம் உள்ளது. அருகில் கூத்தனூர் உள்ளது. சிறிது தூரத்தில் திருவீழிமிழலை என்னும் சிவத்தலம் உள்ளது. இப்பகுதியில் உள்ளது தான் செதலபதி என்னும் ஊர். இங்கு முக்தீஸ்வரர் கோவில் என்று ஒரு கோவில் உள்ளது. இந்த கோவிலில் என்ன விசேஷம் என்றால் இந்த இறைவனை சூரியனும் சந்திரனும் ஒரே நேரத்தில் வணங்கியதாக வரலாறு உள்ளது. எனவே இதை என்றும் அமாவாசைத் திருத்தலம் என்று அழைக்கிறார்கள். இத்தலத்தில் இராமபிரானே வந்து தன்னுடைய தந்தைக்கு எள்ளும் நீரும் இறைத்ததாக வரலாறு உள்ளது. அப்படிப்பட்ட இடத்திற்கு குடும்பத்துடன் சென்று வழிபட்டு வாருங்கள் என என் நண்பரிடம் தெரிவித்தேன். நெருங்கி விட்டது ஆடி அமாவாசை. எல்லோரும் முன்னோர்களை வழிபடுங்கள். பித்ரு தோஷத்திலிருந்து விமோசனம் பெறுங்கள்.
No comments:
Post a Comment